குற்றாலத்தில் வளர்ச்சி பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்-அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி


குற்றாலத்தில் வளர்ச்சி பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்-அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
x
தினத்தந்தி 11 Jun 2023 12:30 AM IST (Updated: 11 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

“குற்றாலத்தில் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்” என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

தென்காசி

"குற்றாலத்தில் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்" என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டுக்கான சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குளிர்ந்த காற்றும் தற்போது வீசி வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று குற்றாலத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். குற்றாலம் அருவிக்கரைகள் மற்றும் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார்.

பேட்டி

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி மற்றும் சிற்றருவி ஆகிய அருவிக்கரை பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.11.34 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இரு மாதங்களுக்கு முன்பே இந்த பணிகளை தொடங்க அனுமதி கொடுத்திருந்த போதிலும் இங்கு சில பகுதிகள் வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்படி பல்வேறு துறைகளிடமிருந்து தடையின்மை சான்று பெற்று தான் பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த சான்று கிடைத்ததும் பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம்

அதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். குற்றாலம் அருவிக்கரைக்கு செல்ல இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த கட்டணம் என்பது எத்தனை பேர் குற்றாலத்திற்கு வருகிறார்கள்? என்பதை கணக்கில் எடுத்துக் கொள்வதற்காக தான். இவ்வளவு பேர் வருகிறார்கள் என்று கணக்கெடுத்தால் அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்க முடியும். சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் போது வியாபாரம் பெருகும். அவர்கள் இங்கு தங்கும்போது தங்கும் விடுதிகளுக்கு வருமானம் வரும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும். உள்ளூர் வளர்ச்சி ஏற்படும் போது மாநில வளர்ச்சி ஏற்படும். இருசக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.10 என்பது சிறிய கட்டணம் தான். இருப்பினும் இது வசூலிக்கப்பட மாட்டாது.

தனியார் அருவிகள்

குற்றாலத்தில் அரசு விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆகியதால் அதனை சீரமைக்க உள்ளோம். குற்றாலத்தில் தனியார் அருவிகள் செயல்பாடுகள் குறித்து தகவல்கள் எனக்கு எதுவும் வரவில்லை. நீதிமன்ற உத்தரவுபடி அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை மாவட்ட கலெக்டர் மேற்கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், தனுஷ் குமார் எம்.பி., தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார், குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷம்மா, சுகாதார அலுவலர் ராஜகணபதி, தி.மு.க. மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் உள்பட பலர் உடன் சென்றனர்.



Next Story