தாயை பிரிந்து தவித்து வரும் குட்டி யானையை முகாமிற்கு அனுப்ப முடிவு?


தாயை பிரிந்து தவித்து வரும் குட்டி யானையை முகாமிற்கு அனுப்ப முடிவு?
x

குட்டியானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் 3-வது நாளாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை,

கோவை மருதமலை வனப்பகுதியில் பெண் யானை உடல் நலம் பாதிப்படைந்த நிலையில் வனப்பகுதியில் படுத்து கிடந்தது. அதன் அருகே 4 மாத குட்டியானையும் நின்றது. வனத்துறையினர் பொக்லைன் மூலம் பெண் யானையை தூக்கி நிறுத்தி சிகிச்சை அளித்தனர். உடல்நலம் தேறிய பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கிடையே, யானைக்கு சிகிச்சை அளிக்கும்போது தாய் யானையிடம் இருந்து குட்டியானை பிரிந்து மற்ற யானை கூட்டத்துடன் சுற்றி திரிந்தது.

இந்தநிலையில் குட்டியானை நேற்று முன்தினம் காலை விராலியூர் அருகே உள்ள பச்சான் வயல் என்ற இடத்தில் தனியாக தவித்தபடி நின்றது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு ஜீப்பில் ஏற்றி கோவை மருதமலை வனப்பகுதி அருகே உள்ள யானை மடுவு பகுதிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த குட்டி யானைக்கு புட்டி பால் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குட்டியானையை தாயுடன் சேர்ப்பதற்காக தாய் யானை நடமாடும் வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். ஆனால் தாய் யானையும் குட்டி யானையும் இன்னும் சேரவில்லை.

தாயைப் பிரிந்து தனியாக வந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க 3-வது நாளாக வனத்துறையினர் முயன்று வரும் நிலையில், இன்று மாலைக்குள் வெற்றி அடையாத பட்சத்தில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமிற்கு குட்டி யானையை அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


Next Story