வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தி தர மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு, கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கேட்டுக்கொள்ளப்பட்டவாறு, என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது; அதற்காக நிலம் கையகப்படுத்தி தர மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடி வரும் கடலூர் மாவட்ட மக்களும், உழவர்களும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தடைகளை தகர்த்து என்.எல்.சி சுரங்க நிலப்பறிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். வாழ்வாதாரத்தையும், வாழ்வுரிமையையும் காக்க கிராமசபை மூலம் குரல் கொடுத்துள்ள கடலூர் மாவட்ட மக்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடலூர் மாவட்டத்தின் இயற்கை வளங்களையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களையும் சுரண்டி, வட இந்தியர்களுக்கு வேலை வழங்குவதற்காகவும், வட இந்தியாவில் முதலீடு செய்வதற்காகவும் நடத்தப்படும் என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்காக முப்போகம் விளையும் நிலங்கள் பறிக்கப்படுவதையும், அதற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதையும் ஒட்டுமொத்த தமிழ்நாடும் நன்றாக அறியும். அதற்கு எதிராக அறவழியில் ஆயிரமாயிரம் போராட்டங்களை பொதுமக்களும், உழவர்களும் நடத்தினாலும், அவற்றைக் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு, கண்கவசம் போடப்பட்ட குதிரையைப் போன்று என்.எல்.சிக்கு சேவகம் செய்வதை மட்டுமே முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியரும் தங்களின் பிறவிப்பயனே என்.எல்.சிக்கு நிலம் பறித்துத் தருவது தான் என்ற நினைப்பில் செயல்பட்டு வருகின்றனர்.
அதனால் தான் ஜனநாயகத்தின் வலிமையான அடித்தளமாக கருதப்படும் கிராமசபையில் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவிக்கும் நோக்குடன், உலக தண்ணீர் நாளையொட்டி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்களை மக்கள் நிறைவேற்றியுள்ளனர். அதற்கும் கூட அதிகாரிகள் மூலம் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் தகர்த்து தான் கடலூர் மாவட்ட மக்கள் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றனர்.
உலக தண்ணீர் நாளையொட்டி கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று முன்மொழிந்ததே மத்திய அரசின் நீர்வள அமைச்சகம் தான். நீர்வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பது தான் நேற்றைய கிராமசபைக் கூட்டத்தின் நோக்கம் ஆகும். அந்நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் என்.எல்.சி நிறுவனம் மூடப்பட வேண்டும். அந்த வகையில் பார்த்தால், என்.எல்.சி நிறுவனத்திற்கும், அந்த நிறுவனத்தின் சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுவது மிகவும் பொருத்தமானது ஆகும். ஏனெனில், சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை 10 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் இப்போது ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டது. அதற்கு காரணம் என்.எல்.சி தான்.
கிராம சபை என்பது கூடிக் கலையும் அமைப்பு அல்ல. கிராமசபை என்றால் என்ன? அதன் வரையறை என்ன? என்பது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 243(பி) பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை மாநில அளவில் செய்யும் பணிகளை, கிராம அளவில் செய்வதற்கும், சட்டப்பேரவைக்கு மாநில அளவில் உள்ள அதிகாரத்தை, கிராம அளவில் பயன்படுத்துவதற்கும் கிராம சபைக்கு அதிகாரம் உள்ளது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அதிகாரம் பெற்ற கிராமசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசு எளிதாக கடந்து சென்று விடக் கூடாது. அவற்றை ஆய்வு செய்து அதிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கடலூர் மாவட்ட கிராமசபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சாதாரணமான ஒன்றல்ல. அவற்றில் இடம் பெற்றுள்ள வரிகள், என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் உள்ள வலிகள். கடந்த 60 ஆண்டுகளாக தங்களின் நிலங்களை வழங்கிய மக்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை; வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு என்.எல்.சியில் வேலை வழங்கப்படவில்லை; தூய்மையான காற்றும், பாதுகாப்பான குடிநீரும் பறிக்கப்பட்டு விட்டது; சுரங்கங்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் உடல் நலத்தைக் கெடுக்கின்றன; அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுக்கள் புவிவெப்பமயமாதலை விரைவுபடுத்துகின்றன. இவ்வளவு பாதிப்புகளையும் எதிர்கொண்டு வரும் மக்கள், அந்த பாதிப்புகளில் இருந்து தங்களைக் காப்பாற்றுங்கள்.... சராசரி மனிதனாக வாழ அனுமதியுங்கள் என்று எழுப்பும் கூக்குரலாகவே கிராமசபைக் கூட்ட தீர்மானங்களை தமிழக அரசு பார்க்க வேண்டும்.
கடலூர் மாவட்ட மக்களும் தமிழ்நாடு அரசின் ஆளுகைக்குள் உள்ளவர்கள் தான். அவர்களைக் காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. எனவே, கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு, கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கேட்டுக்கொள்ளப்பட்டவாறு, என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க முடியாது; அதற்காக நிலம் கையகப்படுத்தி தர மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.