சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்
சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்
கீழபனங்காட்டாங்குடியில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டு்ம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழபனங்காட்டாங்குடி கிராமம்
கூத்தாநல்லூர் அருகே திருவாரூர், மன்னார்குடி சாலையில் கீழபனங்காட்டாங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டிய சாலையோரத்தில் அந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடையை கீழபனங்காட்டாங்குடி, கானூர், வடகட்டளைகோம்பூர், வேளுக்குடி, பழையனூர், நாகங்குடி, மங்களாபுரம், மாளிகைத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், பள்ளி மாணவர்கள், உள்ளூர், வெளியூர் பயணிகள் பஸ் வரும் வரை காத்திருப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இடிந்து விழும் நிலையில் கட்டிடம்
கடந்த சில ஆண்டுகளாக இந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் தடுப்பு தூண்கள் பழுதடைந்து, சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கீரிட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு காணப்படுகிறது. கட்டிடம் பலம் இழந்து உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் சேதமடைந்த பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவிகள் சிரமம்
இதுகுறித்து கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த முருகேசன் கூறுகையில், கீழபனங்காட்டாங்குடியில் உள்ள பயணிகள் நிழற்குடை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் போன்ற நகர பகுதிகளில் படிக்கக்கூடிய பள்ளி- கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல வேலைக்கு செல்வோர் மற்றும் உள்ளூர்- வெளியூர் பயணிகள் உள்பட பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
கட்டிடம் சேதமடைந்து உள்ளதால் பயன்படுத்தி கொள்ள முடியாத நிலையில் மழை மற்றும் வெயில் காலங்களில் கூட சாலையோரங்களில் நிற்க வேண்டிய நிலை உள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதனால், சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
புதிதாக கட்டித்தர வேண்டும்
இதுகுறித்து கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த விசாலினி கூறுகையில், திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் சாலை என்பதால் கீழபனங்காட்டாங்குடி பயணிகள் நிழற்குடை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் கிராமங்களை சேர்ந்த மக்கள் பஸ் ஏறுவதற்கு கூடும் இடமாக இந்த கட்டிடம் உள்ளது. தற்போது பயணிகள் பயன்படுத்த முடியாத நிழற்குடையாக உள்ள இந்த கட்டிடத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடும் கூடாரமாக மாறி வருகிறது.
நிழற்குடை இருந்தும், வெயிலில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கைக்குழந்தைகளுடன் நிற்கும் பெண்கள், வயதானவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பல்வேறு வகையில் சிரமம் அடைகின்றனர். எனவே, சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்றார்.