சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும்
சீர்காழி அருகே, வள்ளுவக்குடி கிராமத்தில் சேதமடைந்த குடிநீா் தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சேதமடைந்த குடிநீர் தொட்டி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் உப்பாகவும், காவி நிறத்திலும் இருந்ததால் ஊராட்சி சார்பில் மெயின் ரோடு அருகே குடியிருப்புக்கு மத்தியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
இதில், தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டி கட்டப்பட்டு 15 ஆண்டுகள் கடந்து விட்டதால் சேதமடைந்து உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால், இந்த குடிநீர் தொட்டி எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.ஆகவே, இந்த குடிநீர் தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.