தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்


தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்
x

குடியாத்தம் அருகே நடந்த தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.

வேலூர்

தொழிலாளி கொலை

குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் மதுராம்பிகை நகரை சேர்ந்தவர் ஹையாத்பாஷா (வயது 36), கூலி தொழிலாளி. இவர் கடந்த 12-ந்தேதி கள்ளூர் காந்திநகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மாட்டு தீவனப்பயிர்களுக்கு நடுவே நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஹையாத்பாஷா கொலை செய்யப்பட்ட இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசாருடன், இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

விரைவில் பிடிபடுவார்கள்

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில் ஹையாத்பாஷா கொலை சம்பவம் தொடர்பாக என்னுடைய தலைமையிலும், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையிலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தனிப்படையினர் கேரள மாநிலத்திற்கும், மற்றொரு தனிப்படையினர் ஆந்திர மாநிலத்திற்கும் சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக துப்பு கிடைத்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த பொருட்கள் தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.


Next Story