முதுமலை காப்பகத்துக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை
குட்டி யானையை மற்ற யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி பலன் அளிக்காததால் காப்பகத்தில் விட முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 4-ம் தேதி குட்டியுடன் வந்த தாய் யானை, வயது மூப்பு காரணமாக திடீரென மயங்கி விழுந்தது. மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், இரண்டு நாட்களுக்கு பிறகு தாய் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இரண்டு மாதமே ஆன பெண் குட்டி யானை தனது தாயை சுற்றி சுற்றி வந்து பாச போராட்டத்தில் ஈடுபட்டது. இதையடுத்து அந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு, வனப்பகுதிகளில் உள்ள யானைக் கூட்டங்களுக்குள் சேர்த்து அனுப்பி வைத்தனர். ஆனால் ஒரு சில மணி நேரங்களில் அந்த யானைக் கூட்டம் அந்த குட்டியை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியது.
அரேப்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த அந்த குட்டி யானையை ஆசனூர் வனத்துறையினர் மீட்டு, ஆசனூர் வனச்சரக அலுவலகத்தில், கடந்த மூன்று நாட்களாக பால் மற்றும் மருந்து ஆகியவற்றை அளித்து பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அந்த இரண்டு மாத குட்டியை இன்று காலை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ குழுவினரின் உயர்தர சிகிச்சை மற்றும் பராமரிப்பு ஆகியவை முதுமலையில் இருப்பதால் அங்கு வைத்து இந்த குட்டி யானை பராமரிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.