சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி வளாகத்தில் அடைப்பு


சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி வளாகத்தில் அடைப்பு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சீர்காழியில், சாலையில் சுற்றத்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி வளாகத்தி்ல் அடைக்கப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சீர்காழியில், சாலையில் சுற்றத்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி வளாகத்தி்ல் அடைக்கப்பட்டது.

அடிக்கடி விபத்து

சீர்காழி நகர் பகுதியில் தென்பாதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு, தேர் தெற்கு வீதி, தேர் மேல வீதி, சிதம்பரம் சாலை, மயிலாடுதுறை சாலை, ஈசானிய தெரு, ெரயில்வே ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்லும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி வாகன விபத்துகளும், மாடுமுட்டி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சீர்காழி நகர் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நேற்றுமுன்தினம் சாலையில் நடந்து சென்ற மாணவன் மாடுமுட்டி படுகாயம் அடைந்தான்.

நகராட்சி வளாகத்தில் மாடுகள் அடைப்பு

இதுகுறித்த செய்தி நேற்று 'தினத்தந்தி' நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக நகர் மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தலைமையில் நகராட்சி ஆணையர் வாசுதேவன், சுகாதார அலுவலர் ராம்குமார் செந்தில் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு சாலைகளில் சுற்றித்திரிந்த 19 மாடுகளை பிடித்து அவற்றை சீர்காழி நகராட்சி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் கீழ் அடைத்து வைத்து கால்நடைகளுக்கு தேவையான உணவுகளை வழங்கி வருகின்றனர்.

செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஏலம் விடப்படும்

இதுகுறித்து நகர்மன்ற தலைவர் கூறுகையில், சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 19 மாடுகளை பிடித்து பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ளது. மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் அளிக்கப்படும். அபராதம் கட்ட தவறினால் மாடுகள் ஏலம் விடப்படும். தொடர்ந்து நகர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்படும் என்றார்.


Next Story