தம்பதி தீக்குளிக்க முயற்சி


தம்பதி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 2 March 2023 12:15 AM IST (Updated: 2 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நடைபாதை கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தம்பதி தீக்குளிக்க முயன்றனர். இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி

நடைபாதை கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தம்பதி தீக்குளிக்க முயன்றனர். இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

நடைபாதையில் கடைகள்

ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவின் வெளிப்பகுதியில் உள்ள நடைபாதை, மதுவனா சாலை, ஆட்லி சாலை ஒரங்களில் சிறு வியாபாரிகள் கடை வைத்து உள்ளனர். இவர்கள் கேரட் போன்ற காய்கறிகள், பூக்கள், கம்பளி, பொம்மை போன்றவற்றை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்தநிலையில் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வந்து செல்லும் பகுதியான தாவரவியல் பூங்கா பகுதியில் உள்ள சாலையோரத்தில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளதால், சீசன் சமயங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 120 கடைகள் அகற்றப்பட்டன. எனினும் சாலையோர வியாபாரிகள் நலன் கருதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் நகராட்சி மூலம் நிரந்தர கடைகள் கட்டி தர முடிவு செய்யப்பட்டது.

அகற்ற நோட்டீஸ்

இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக 55 நிரந்தர கடைகள் கட்டி முடித்து, டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் கடைகள் தங்களுக்கு கிடைக்காததால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள் நடைபாதை மற்றும் சாலையோரம் மீண்டும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளை அகற்றுமாறு வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை. இதையடுத்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அந்த பகுதியில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

இதேபோன்று ஊட்டி வேலிவியூ பகுதியில் இருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடை வைத்திருந்த ஒரு தம்பதி நகராட்சி அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தம்பதியினர் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் ஒரு வார காலம் அவகாசம் அளித்து கடையை காலி செய்யுமாறு அறிவுறுத்தி சென்றனர்.


Next Story