நிலத்தை மீட்டு தரக்கோரி தம்பதி தீக்குளிக்க முயற்சி


நிலத்தை மீட்டு தரக்கோரி தம்பதி தீக்குளிக்க முயற்சி
x

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டு தரக்கோரி தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டு தரக்கோரி தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

வேலூர் மாவட்டம் காளாம்பட்டு அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இதுதொடர்பாக கோவிந்தராஜ் மற்றும் சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி நதியா ஆகியோர் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் திடீரென போர்ட்டிகோ கீழ் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி விசாரணை நடத்தினார்.

நிலத்தை மீட்டு தர வேண்டும்

இதுகுறித்து கோவிந்தராஜ் கூறுகையில், எனக்கு சொந்தமான 2 ஏக்கர் 65 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளனர். இதை தட்டிக்கேட்டால் அடியாட்களுடன் வந்து என்னையும், எனது மனைவியும் தாக்கினர்.

எனது மனைவியின் நகையையும் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து நிலம் தொடர்பான பிரச்சினை என்பதால் இருவரையும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story