விபத்தில் பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.2½ லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


விபத்தில் பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.2½ லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
x

விபத்தில் பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.2½ லட்சம் வழங்க வேண்டும் என காப்பீடு-நிதிநிறுவனங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரம்பலூர்

விவசாயி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி கக்கன் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 35), விவசாயி. இவரது மனைவி சரளாதேவி (27). இவர்களுக்கு தரணி என்ற மகனும், மணிமொழி என்ற மகளும் உள்ளனர். முரளி பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள இண்ட்ஸ்இண்ட் நிதிநிறுவனத்தின் மூலம் கடன்பெற்று மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தார். இதற்கான தவணைகளை முறையாக செலுத்தி வந்திருந்தார்.

இந்தநிலையில் கடந்த 2.5.2014 அன்று சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே தலைவாசல் செல்லும் சாலையில் முரளி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முரளி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

விபத்தில் பலி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முரளி பரிதாபமாக இறந்தார். இதனைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளுக்கு வாகனக்கடன் வழங்கிய இண்ட்ஸ்இண்ட் நிதி நிறுவனத்திற்கு முரளியின் மனைவி மற்றும் வாரிசுதாரர் என்ற முறையில் சரளாதேவி, வாகன கடனுக்கான தவணைத்தொகை ரூ.79 ஆயிரத்து 648- ஐ முழுமையாக செலுத்தி கடன்மீதான நிலுவை இல்லை என சான்றிதழ் பெற்றார். அதனைக்கொண்டு மோட்டார் சைக்கிளுக்கு காப்பீடு செய்திருந்த சோழமண்டலம் ஜெனரல் இன்சூரன்சு நிறுவனத்திற்கு காப்பீடு தொகை பெறுவதற்கான மனுவை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அளித்திருந்தார். ஆனால் காப்பீடு நிறுவனம் சரளாதேவிக்கு காப்பீடு தொகையை தராமலும், மனுவிற்கு பதில் அளிக்காமலும், அவரை அலைக்கலைப்பு செய்துள்ளனர்.

நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சரளாதேவி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், மனுதாரர் சரளாதேவிக்கு சோழமண்டலம் ஜெனரல் இன்சூரன்சு நிறுவனம் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும் என்றும், சரளாதேவிக்கு காப்பீட்டு தொகையை பெற்றுத்தராமல் அவரை மனஉளைச்சலுக்கு உள்ளாகியதால் இண்ட்ஸ்இண்ட் நிதி நிறுவனம் ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.


Next Story