கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி - நாகலாபுரம் நெடுஞ்சாலையில், நெமிலி என்.என். கண்டிகை இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம், கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் 6 மாதத்திற்கு பின் தற்காலிக தரைப்பாலம் அமைத்து போக்குவரத்து பயன்பாட்டுக்கு விடப்பட்டது. அந்த பாலமும் 2019-ம் ஆண்டு பெய்த கனமழையால் உடைந்தது. இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு தமிழக அரசால் ரூ.16 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது.

உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு, 18 மாதங்களில் காலஅவகாசம் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது. முதற்கட்டமாக உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு மண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், போதிய உறுதி தன்மை இல்லாததால் பாலப்பணிகள் கைவிடப்பட்டது. பின்னர் பாலப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இது குறித்து என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-

தற்காலிக பாலம் தொடர் மழையால் 2 முறை அடித்து செல்லப்பட்டது. இதனால், திருத்தணி - நாகலாபுரம் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தற்போது உள்ள தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்துள்ளது.. வருகிற மழைக்காலங்களில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டால் என்.என்.கண்டிகை சுற்றுவட்டார கிராமமான, சிவாடா, வெங்கடாபுரம், கொண்டாபுரம் மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் மக்கள் நல்லாட்டூர் வழியாக கூடுதலாக 10 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு திருத்தணியை வந்தடைய வேண்டிய நிலை உள்ளது என்று தெரிவித்தனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி தெரிவித்ததாவது:-

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. உயர்மட்ட மேம்பாலம் மண் பரிசோதனைக்கு பிறகு 13 தூண்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 10 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story