மதகுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
நன்னிலம் அருகே மதகுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்னிலம்:
நன்னிலம் அருகே மதகுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதகுகள் அமைக்கும் பணி
நன்னிலம் அருகே மூங்கில்குடியில் தலைப்பு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூல் மூங்கில்குடி, காக்கா கோட்டூர், சுரக்குடி ஆகிய கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன.
வளப்பாற்றில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைக்க மூங்கில்குடியில் புதிதாக மதகு கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
தண்ணீர் செல்ல முடியாத நிலை
இந்த மதகு கட்டப்பட்டால் வளப்பாற்றில் இருந்து வரும் தண்ணீரை, அந்த மதகில் தேங்கி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த முடியும்.வெள்ள காலங்களில் அந்த மதகை திறந்து விட்டால் வெள்ள நீர் வடிந்துவிடும்.
ஆனால் புதிய மதகுகள் கட்டும் பணி மெதுவாக நடைபெறுவதால் மேற்கண்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விரைந்து முடிக்க வேண்டும்
இதேபோல் விளைநிலங்களுக்கு பாசனம் வசதி தரக்கூடிய புளியஞ்சி வாய்க்காலுக்கு உரிய பிரதான மதகும் கட்டும் பணிக்கு அஸ்திவாரம் போட்டப்படியே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முற்றுகை போராட்டம்
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.