சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம்
சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் மத்திய அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை செய்வதை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று அற வழியில் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார். திருவள்ளூர் நகர தலைவரும், திருவள்ளூர் நகர மன்ற உறுப்பினருமான வக்கீல் ஜான், மாநில செயலாளர் மோகன்தாஸ், மாநில துணைத் தலைவர் ஆனந்தன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வி.எஸ்.ரகுராமன், பிரபாகரன், மாவட்டத் துணைத் தலைவர் அருள்மொழி, ஓ.பி.சி.அணியின் மாநில செயலாளர் வெங்கடேஷ், வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அமலாக்கத்துறையை கைப்பாவையாக மத்திய பா.ஜ.க. அரசு கையாண்டு வருவதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் கண்டன உரையாற்றினர்.