கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு


கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு
x

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

நிலத்துக்கு இழப்பீடு

காட்பாடி தாலுகா இளையநல்லூர் அருகே உள்ள குப்பிரெட்டிதாங்கல் கிராமத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மின்வாரியத்துக்காக பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர்களான அருணா, பாபு, கோபி உள்ளிட்ட 19 பேரின் சுமார் 35 ஏக்கர் நிலத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என்றும், அதற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வேலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஒரு செண்டுக்கு ரூ.5 ஆயிரம், 30 சதவீதம் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. எனினும் அந்த உத்தரவு நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் அவர்கள் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு அளித்தனர்.

கோர்ட்டு உத்தரவு

அதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் 6 அரசு கார்கள் மற்றும் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி ஜப்தி செய்ய வந்தபோது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்குவதாக தெரிவித்ததால் திரும்பி சென்றனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

கலெக்டர் கார் ஜப்தி

இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு கோர்ட்டு அமீனா மற்றும் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் தங்கள் வழக்கறிஞருடன் வந்தனர். அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் காரை ஜப்தி செய்து, அதில் நோட்டீஸ் ஒட்டினர். தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் காரில் ஒட்டப்பட்ட ஜப்தி நோட்டீசை எடுத்து விட்டு, காரை விடுவித்து அங்கிருந்து சென்றனர்.

கலெக்டரின் கார் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story