கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மக்களை அழைத்துச்சென்று சாமி கும்பிட வைத்த கலெக்டர்


கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மக்களை அழைத்துச்சென்று சாமி கும்பிட வைத்த கலெக்டர்
x

அன்னவாசல் அருகே கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மக்களை அழைத்துச்சென்று சாமி கும்பிட கலெக்டர் நடவடிக்கை எடுத்தார். அப்போது சாமி வந்ததை போல் ஆடி அவதூறாக பேசிய பெண், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

அய்யனார் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே இறையூர் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் தங்களை வழிபட பல தலை முறைகளாக அனுமதி மறுப்பதாக மாவட்ட கலெக்டரிடம் ஆதிதிராவிட மக்கள் புகார் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு, ஆதிதிராவிட மக்களை அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.

பெண் கைது

அப்போது அந்த கோவிலின் பூசாரியான மாற்று சமூகத்தை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி சிங்கம்மாள் சாமி வந்ததை போல் ஆடி ஆதிதிராவிட மக்களை அவதூறாக பேசியதால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர், சிங்கம்மாள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையிலான போலீசார் சிங்கம்மாள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து ஆதிதிராவிட மக்கள் கூறுகையில், தலைமுறை தலைமுறையாக அய்யனார் கோவிலில் வழிபாடு செய்ய முடியாமல் தவித்த எங்களுக்கு மாவட்ட கலெக்டர் மூலம் சாமி தரிசனம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேநிலை நீடிக்க அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Next Story