மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்
x

திருவள்ளூர் கலெக்டர் அலுவலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சினைகள் தொடர்பாகவும் என மொத்தம் 308 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதி உள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக திருவள்ளூர் வட்டத்தில் ஜாமிஆ மஸ்ஜீத் பள்ளிவாசலில் அரபி ஆசிரியராக பணிபுரியும் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கும் பொருட்டு மானிய தொகை ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும், பாம்பு கடித்து உயிரிழந்தவரின் மனைவிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ஒரு மாற்றுத்திறனாளிக்கு தையல் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார். அதேபோல் நேபாளம், காத்மண்டில் நடைபெற உள்ள போட்டிக்கு இந்திய அணியின் சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள 2 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். மேலும் ரூ.83 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை மாற்றுத்திறனாளி ஒருவருக்கு கலெக்டரின் விறுப்புரிமை நிதியிலிருந்து வழங்கினார்.


Next Story