திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்


திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
x

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 49 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சினைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

இதில் நிலம் சம்பந்தமாக 142 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 45 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 40 மனுக்களும், பசுமை வீடு அடிப்படை வசதிகள் வேண்டி 75 மனுக்களும், இதர துறைகள் சார்பாக 107 மனுக்களும் என மொத்தம் 409 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதேபோல் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டு அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மடிக்கணினி வேண்டி மனு வழங்கிய பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சட்டக் கல்லூரி மாணவியின் மனுவிற்கு உடனடி தீர்வு காணும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டிலான மடிக்கணினியை அம்மாணவிக்கு கலெக்டர் இலவசமாக வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 680 வீதம் ரூ.33 ஆயிரத்து 400 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story