கடலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு; கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று கலெக்டர் அருண்தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
டெங்கு தடுப்பு பணி
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை நேரிடையாக பார்வையிட்டு, முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று காலை கலெக்டர் அருண்தம்புராஜ், கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்டிப்பாளையம், சூரசம்கார தெரு, குழந்தை காலனி மற்றும் கால்வாய் தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்களுக்கு அறிவுரை
அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில், குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்புறம் மற்றும் ஏ.சி. எந்திரங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த தண்ணீரில் தான் அதிகளவில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க, அதனை பரப்பும் கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழி முறையாகும். மேலும் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
அரசு மருத்துவமனை
அதனை தொடர்ந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, டெங்கு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளிடம், மருத்துவ சேவைகள் மற்றும் மருந்துகள், உணவுகள் ஆகியவை குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். தொடர்ந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
கழிப்பறைகளை தூய்மையாக...
பின்னர் மருத்துவமனையில் செயல்படும் சமையல் கூடத்தை பார்வையிட்டு சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்து குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். மேலும், பல்வேறு பிரிவுகளில் உள்ள கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் (பொறுப்பு) கீதாராணி, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி, மாநகர நகர்நல அலுவலர் எழில் மதனா மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பலர் உடனிருந்தனர்.