மூடப்பட்டுள்ள மாமல்லபுரம் கடற்கரை கோவில் கருவறையை பார்வையிட அனுமதிக்க வேண்டும்; சுற்றுலா பயணிகள் கோரிக்கை


மூடப்பட்டுள்ள மாமல்லபுரம் கடற்கரை கோவில் கருவறையை பார்வையிட அனுமதிக்க வேண்டும்; சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x

கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மாமல்லபுரம் கடற்கரை கோவில் கருவறையை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு

கடற்கரை கோவில்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை கோவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னம் ஆகும். 7-ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தில் ஆட்சி செய்த 2-ம் நரசிம்மவர்ம பல்லவ மன்னனால் இந்த கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டது. 2 விமானங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் 2 விமானங்களும் கிழக்கு, மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய கோவில் உயரமானதாக 5 அடுக்கு கொண்ட கோபுரத்தையும், மேற்கு நோக்கிய கோவில் சிறியதாக 2 அடுக்கு கொண்ட கோபுரத்தையும் உடையதாக உள்ளது. சிவனும், விஷ்ணுவும் இந்த கோவிலின் 2 கருவறையில் வீற்றிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் இந்த கோவிலின் அழகை ரசித்து புகைப்படம் எடுத்து செல்வதுண்டு. குறிப்பாக வட இந்தியாவில் தாஜ்மகாலும், தென் இந்தியாவில் கடற்கரை கோவிலும் முக்கியத்துவம் பெற்ற பாராம்பரிய சின்னங்களாக உள்ளன.

இந்தியாவுக்கு அரசு முறைப்பயணமாக வரும் வெளிநாட்டு அதிபர்கள், வெளிநாட்டு பிரதமர்கள், தூதர்கள் பலர் மாமல்லபுரம் வந்து இந்த கோவிலை கண்டுகளித்து விட்டு செல்வது வழக்கம். மறைந்த இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ம் ஆண்டு மாமல்லபுரம் வந்தபோது இந்த கோவிலின் மகத்துவத்தை உணர்ந்து இதனை பாதுகாக்க அப்போது உத்தரவிட்டார். அப்போது கடற்கரை ஓரம் முழுவதும் கற்கள் கொட்டி கடல் அலை இந்த கோவிலுக்குள் வராதபடி பாதுகாக்கும் பணி தொடங்கப்பட்டது.

மூலவரை பார்க்க தடை

இந்த நிலையில் கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2 கோபுரங்களின் கருவறைக்குள் சுற்றுலா பயணிகளும் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டு கோவிலில் ஒரு கருவறையில் வீற்றிருக்கும் லிங்க வடிவில் உள்ள சிவபெருமான், மற்றொரு கருவறையில் படுத்த நிலையில் உள்ள விஷ்ணுவையும் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கடற்கரை கோவிலை பக்தியுடன் சென்று சுற்றி பார்க்கும் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சில விதிகளுக்கு உட்பட்டு உள்ளே சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

குறிப்பாக கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டியம், குஜராத், பீகார் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஆன்மிக யாத்திரை வருபவர்கள் பலர் கடற்கரை கோவில் கருவறையில் வீற்றிருக்கும் விஷ்ணு, சிவபெருமானை பார்த்து ரசித்து வழிபாடு செய்துவிட்டு செல்வதுண்டு. தற்போது அங்கிருந்து வருபவர்கள் வெறும் கடற்கரை கோவிலின் சிற்பத்தை மட்டும் பார்த்துவிட்டு மூலவர் சிலைகளை பார்க்க முடியாமல் ஏமாந்து செல்வதை காண முடிகிறது.

குறிப்பாக மனிதர்கள் சுவாசிக்கும் காற்று மாசினாலும் இந்த கோவிலும் மாசடைய வாய்ப்பு உள்ளதாக கூறி கடற்ரை கோவிலின் உள்ளே உள்ள மூலவரை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவனும், விஷ்ணுவும் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த கோவிலாக மக்கள் இதனை கருதுகின்றனர். இங்குள்ள மூலவரை பார்த்து தரிசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பாக்கின்றனர்.

கோரி்க்கை

கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போதும் ராட்சத அலைகள் இந்த கோவிலுக்குள் புகுந்து தாக்கியும், எந்தவித சிறு சேதாரமும் ஏற்படாமல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இந்த கோவிலை பார்க்க உள்நாட்டு பயணிகள் ரூ. 40-ம், வெளிநாட்டு பயணிகள் ரூ.600 ம் கட்டணம் செலுத்தி பார்க்க வருகின்றனர். இதில் சிலர் இங்குள்ள சிற்பங்கள், கட்டிடக்கலையை மட்டும் பார்க்க வருவர். சிலர் ஆன்மிக சிந்தனையுடன் பார்க்க வருகிறார்கள் அவர்களையாவது காற்று மாசு ஏற்படாதவாறு முக கவசம் அணிந்து கருவறைக்குள் சென்று கிழக்கு நோக்கி லிங்க வடிவில் உள்ள சிவபெருமானையும், மேற்கு புற கோபுரத்தில் வீற்றிருக்கும் விஷ்ணுவையும் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story