5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறப்பு விழா காணாத சிறுவர் பூங்கா


5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறப்பு விழா காணாத சிறுவர் பூங்கா
x

ராமேசுவரம், காட்டுப்பிள்ளையார்கோவில் அருகே 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறப்பு விழா காணாத சிறுவர் பூங்கா உள்ளது. இதற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.45 லட்சம் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம், காட்டுப்பிள்ளையார்கோவில் அருகே 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறப்பு விழா காணாத சிறுவர் பூங்கா உள்ளது. இதற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.45 லட்சம் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சிறுவர் பூங்கா

ராமேசுவரம் காட்டுப்பிள்ளையார் கோவில் அருகே ஸ்ரீராம் நகர் செல்லும் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது .இந்த சிறுவர் பூங்காவில் குழந்தைகள் அமர்ந்து விளையாடும் வகையில் சறுக்குகள், ஊஞ்சல்கள், சிறிய இருக்கைகளுடன் கூடிய ராட்டினங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டதுடன் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களும் நடைபயிற்சி செல்ல வசதியாக அலங்கார கற்களும் இந்த பூங்காவை சுற்றி பதிக்கப்பட்டிருந்தன. இதற்கு மத்திய அரசு நிதி ரூ.45 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது.

இந்த சிறுவர் பூங்கா 2017-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன்பிறகு இதுநாள் வரை திறக்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

5 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை

எங்கள் பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தோம். மத்திய அரசு நிதி உதவியுடன் கடந்த 2017-ம் ஆண்டே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சிறுவர் பூங்கா திறந்தபாடில்லை.

இதனால் சிறுவர் பூங்கா தற்போது ஆங்காங்கே புற்கள் முளைத்து புதர் செடியாக காட்சியளிக்கிறது. அரசு பணம் ரூ.45 லட்சம் வீணாகும் நிலை உள்ளது.

அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு பயன்அடைவதற்கு தானே. இங்கு கட்டி முடிக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பதில் ஏன் தான் பராபட்சம் காட்டுகிறார்கள் என தெரியவில்லை.

திறக்கப்படுமா?

பூங்கா திறக்கப்படாததால் குழந்தைகள் விளையாட முடிவதில்லை. காலை, மாலை நேரங்களில் பெரியவர்கள், மாணவ-மாணவிகள் நடைபயிற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். மழையிலும், வெயிலும் நனைந்து சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் வீணாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் சிறுவர் பூங்காவில் வளர்ந்து உள்ள புதர்செடிகளை அகற்றி அதை திறக்க முன் வர வேண்டும். இப்பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வருமா? என ஒவ்வொரு முறையும் இப்பகுதியை கடந்து செல்லும் சிறுவர்-சிறுமிகளின் ஏக்கத்துக்கு முடிவுக்காலம் வருமா? என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story