2 ஆயிரத்து 697 மாணவர்கள் எழுதும் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு; நாளை மறுநாள் நடக்கிறது
திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நாளை மறுநாள் நடைபெறும் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 697 மாணவர்கள் எழுதுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் நாளை மறுநாள் நடைபெறும் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 697 மாணவர்கள் எழுதுகின்றனர்.
திறனாய்வு தேர்வு
தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு வசதியாக, உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. இதற்காக பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தேர்ச்சி பெறும் 500 மாணவிகள், 500 மாணவர்கள் என மொத்தம் ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் பிளஸ்-1 முதல் இளநிலை பட்டப்படிப்பை முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.
2 ஆயிரத்து 697 பேர்
இந்த திறனாய்வு தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் நடக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 2 ஆயிரத்து 697 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர். இதற்காக திண்டுக்கல்லில் 6 தேர்வு மையங்களும், பழனியில் 5 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் தாளுக்கான தேர்வும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த திறனாய்வு தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.