சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் பொங்கல் கொண்டாடிய முதல்-அமைச்சர்
சென்னை கொண்டித்தோப்பு குடியிருப்பில் போலீசார் குடும்பங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் கொண்டாடினார். போலீசார் குடும்பங்களுக்கு பரிசுகள் வழங்கி குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
சென்னை,
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கொண்டித்தோப்பில் உள்ள போலீசார் குடியிருப்பில் நேற்று முன்தினம் நடந்த பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பின்னர் போலீசார் குடும்பத்துடன் பொங்கல் வைத்து, அதனை அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத்தொடர்ந்து போலீசாரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுகளை வழங்கினர்.
பின்னர் போலீசார் குடும்பங்களுடன் அவர் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
மக்களை காக்கும் போலீசாருடன்...
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
வெயில் மழை பாராமல் மக்களை காக்கும் போலீசாருடன் மண்ணை காக்கும் பொங்கல் விழாவை கொண்டாடினேன். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி மக்களை காக்கும் போலீசாரை எந்நாளும் காப்போம். தமிழ்நாடு வாழ்க.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.