புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் இன்றும் ஆய்வு
புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் நேற்று முன்தினம் தமிழகத்துக்கு வந்தனர்.
சென்னை,
மிக்ஜம் புயல் மழை, வெள்ளநீரால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. கொட்டி தீர்த்த மழை காரணமாக ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியதால், அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியானது.
புயல் மழை பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்தியக் குழுவினர் நேற்று முன்தினம் தமிழகத்துக்கு வந்தனர். அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்கள். அதன்பின்னர் மத்தியக் குழுவினர் வடசென்னை பகுதிகளில் வெள்ளச்சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்று (புதன்கிழமை) தாம்பரம், வரதராஜபுரம், குன்றத்தூர், நசரத்பேட்டை, மாங்காடு, பூந்தமல்லி, முகலிவாக்கம் உள்ளிட்ட மழை, வெள்ளநீர் பாதிப்புகளை மத்தியக் குழுவினர் பார்வையிட உள்ளனர். அதைபோல திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மத்தியக் குழுவினர் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
கள ஆய்வை முடித்துவிட்டு நாளை (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வருகின்றனர். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதன் பின்னர் அவர்கள் டெல்லிக்கு புறப்பட்டு் செல்கின்றனர்.