நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்


நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்
x

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தி உள்ளது .

திருவாரூர்

மன்னார்குடி:

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தி உள்ளது .

பேட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் வ.சேதுராமன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

டெல்டா பகுதியான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த 29-ந்தேதி மத்திய நிலக்கரி அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது.

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிலக்கரி எடுப்புத் திட்டத்தில் நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதை சார்ந்த பொருட்களை எடுக்க விடுக்கப்பட்ட அழைப்பாணையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 3 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் உள்ள மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் கிழக்கு சேத்தியாத்தோப்பு மற்றும் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய வடசேரி நிலக்கரி பகுதி ஆகியவை ஆகும்.

நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படாது என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. தஞ்சை, திருவாரூரில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். நிலக்கரி ஏல அறிவிப்பு தொடர்பாக உடனடியாக தலையிட்டு மத்திய அரசின் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்க தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வேடிக்கை பார்க்க மாட்டார்கள்

தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்க தலைவர் ராசபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது இந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகளையும், விவசாயத்தையும் சவக்குழியில் தள்ளி சமாதி கட்டுவதற்கான வேலையாகும். இதன் மூலம் இந்த மாவட்டங்களில் பூர்வீக தொழிலை முற்றிலும் புதைகுழிக்குள் தள்ளும் தீவிரத்தோடு நிலக்கரி எடுப்பதற்காக இப்போது அறிவித்து இருக்கும் இந்த அறிவிப்பு என்பது இந்திய தேசத்திற்குள் இந்த மாவட்ட மக்கள் இல்லை என்று மத்திய அரசு கூறுவதுபோல் உள்ளது.

ஏற்கனவே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ெணய் எடுப்பு ஆய்வு பணிகளால் நிலைகுலைந்து போயிருக்கும் இந்த மாவட்ட விவசாயிகளை, விவசாயத்தை கழுத்தை நெரித்து களப்பணி ஆக்கியிருக்கிற மத்திய அரசின் இந்த அறிவிப்பானது அறிவிப்போடு நின்று போக வேண்டும். இல்லையேல் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் களப்பணி ஆனாலும், தங்களது விவசாய நிலத்தை புதைகுழி ஆக்கிட வேடிக்கை பார்க்க மாட்டார்கள். இதை தடுக்க தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கம் போராடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story