குலக்கல்வி முறையை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது


குலக்கல்வி முறையை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கிறது என திருத்துறைப்பூண்டியில் நடந்த கூட்டத்தில் முத்தரசன் பேசினார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

பொதுக்கூட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாயிகளின் உரிமைக்காக போராடிய தியாகி பி.சீனிவாசராவ்வின் 62- வது நினைவு தின பொதுக்கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ. , முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, சிவபுண்ணியம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குலக்கல்வி முறை

மத்திய அரசு அன்மையில் அறிவித்த திட்டம் ஒன்றில் செருப்பு தைப்பவர்கள், மண்பாண்டம் செய்பவர்கள், தையல் தொழிலாளர்கள், முடிவெட்டுபவர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட 18 தொழில் செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்ல கடன் வழங்கப்படும் என அறிவித்தது. இது அந்த தொழில்களை செய்யும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்ட திட்டம் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறொம்.

ஆனால் அந்த தொழிலை செய்பவன் அதை மட்டும் தான் செய்ய வேண்டும். கல்வி அறிவு பெறக்கூடாது என்பதற்காகவே இந்த கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குலக்கல்வி முறையை மத்திய அரசு மீண்டும் கொண்டு வர முயற்சி செய்கிறது.

இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணி சீட்டுக்காக கூடிய கூட்டணி இல்லை. கொள்கையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி. தமிழகத்தில் அ.தி.மு.க. ஒரு இடமோ அல்லது இரண்டு இடமோ வெற்றி பெற்றால் பிரதமர் வேட்பாளராக யாரை ஆதரிப்பார்கள். மோடியை ஆதரிப்பார்களா? இந்தியா கூட்டணியை ஆதரிப்பார்களா? இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் எம்.எல்.ஏ.பாலபாரதி அ.தி.மு.க.வின் தற்போதைய நிலைப்பாடுகள் குறித்து தெளிவாக புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர்கள் ஏன் பா.ஜனதாவுடன் இணைந்தார்கள் ஏன் விலகினார்கள் என தெரியவில்லை. நம்பகத்தன்மையற்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது அ.தி.மு.க. தான் என கூறினார்.


Next Story