வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்
வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் 180-க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர்களுடைய வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். இதில் 30 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக இரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவுக்காக காத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் இந்த வழக்கை முடிப்பதற்கு கூடுதலாக ஒரு மாதம் கால அவகாசம் தேவை என்று கூறியிருந்தனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப்படையில் பணியாற்றும் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முரளி ராஜா என்ற பயிற்சி காவலருக்கும் டிஎன்ஏ மற்றும் குரல் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த அன்று அவர் தனது நண்பர்களுடன் சம்பவம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்ததாகவும் அதற்கு முக்கிய சாட்சியம் உள்ளதாகவும் கூறி சிபிசிஐடி போலீசார் முரளி ராஜாவின் செல்போனை தங்கள் வசம் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தனது செல்போனை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு பயிற்சி காவலர் முரளி ராஜா புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருடைய செல்போனில் பல முக்கிய ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக குரல் ஆதாரங்கள் உள்ளன. எனவே இந்த வழக்கு முடியும் வரை செல்போனை ஒப்படைக்க முடியாது என்று கூறி சிபிசிஐடி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு கோர்ட்டு முரளி ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்தது.