மதுவிருந்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: தனியார் பாருக்கு சீல் வைப்பு
மதுவிருந்தில் கலந்து கொண்டவர்களில் 89 பேர் 21 வயதுக்குக் குறைவானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை,
சென்னையின் கோயம்பேடு அருகே உள்ள ஒரு மாலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல புகழ்பெற்ற நபர் மந்திரா கோரா டி.ஜே நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ஆன்லைன் மூலம் 1500 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளனர். இந்த மாலின் நான்காவது தளத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு ஆடல் பாடலுடன் 21 வயது கீழ் உள்ளவர்களுக்கும் மது விருந்து அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என்றும், மதுவிருந்து நடப்பதாகவும் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே திருமங்கலம் போலீசார், அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது இதில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 900 இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டது தெரிய வந்தது. மேலும் இதில் 21 வயதுக்கும் குறைவான ஆண் பெண்ணிற்கும் மது அளிக்கப்பட்டதும், எந்த ஒரு அனுமதியும் பெறாமல் இந்நிகழ்ச்சியை நடத்தியதால் போலீசார் நிகழ்ச்சியை நிறுத்தினர்.
அனைவரையும் மாலில் இருந்து அப்புறப்படுத்தியதோடு, 844 விலை உயர்ந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்பிரிவின் கீழ் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிகழ்ச்சி நடத்திய விக்னேஷ் சின்னதுரை, மார்க், பாரத் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே இந்த மது விருந்தில் பங்கேற்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் உயிரிழந்து உள்ளார். போலீசார் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுவிருந்தில் கலந்து கொண்டவர்களில் 89 பேர் 21 வயதுக்குக் குறைவானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விருந்தின் போது தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் வழங்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. முதற்கட்ட நடவடிக்கையாக அந்த மாலில் உள்ள தனியார் பாருக்கு போலீசார் சீல் வைத்தனர்.