தடுப்புக்கம்பியில் மோதி சாலையோர பள்ளத்தில் பாய்ந்த கார்
தடுப்புக்கம்பியில் மோதிய கார் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.
ஜீயபுரம்:
திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் முத்துகுமரன்(வயது 50). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும், இவருடைய மனைவி தாமரைச்செல்வி(36), மகள் ஸ்ரீமுகி(17) ஆகியோரும் ஒரு காரில் திருச்சியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் கார் டிரைவர் தனபாலும் அந்த காரில் இருந்தார். காரை தாமரைச்செல்வி ஓட்டினார். முக்கொம்பு அருகில் உள்ள எலமனூர் பகுதியில் சென்றபோது சாலையோர இரும்பு தடுப்பு கம்பி மீது மோதிய அந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து சென்று தபோவன குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னை மரத்தில் மோதி நின்றது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் இருந்தவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதியில் நின்றவர்கள், சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி அவர்களை அழைத்துக்கொண்டு, அங்கு வந்த போலீசாருடன் விபத்து நடந்த இடத்திற்கு சென்றனர். அங்கு கடப்பாரையால் காரின் கதவை உடைத்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் விசாரணை நடத்தி வருகிறார். சினிமா காட்சி போன்று நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.