தூத்துக்குடியில் பரபரப்பு: நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது என்ஜினீயர் உள்பட 5 பேர் உயிர் தப்பினர்
தூத்துக்குடியில் நடுரோட்டில் சென்ற கார் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் என்ஜினீயர் உள்பட 5 பேர் உயிர் தப்பினார்கள்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடுரோட்டில் சென்ற கார் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் என்ஜினீயர் உள்பட 5 பேர் உயிர் தப்பினார்கள்.
என்ஜினீயர்
தூத்துக்குடி முத்தையாபுரம் அபிராமிநகரை சேர்ந்தவர் இளங்குமரன், சிவில் என்ஜினீயர். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மனைவி மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேருடன் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள ரோச் பூங்காவுக்கு சென்றார். காரை இளங்குமரன் ஓட்டிச்சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இரவில் மீண்டும் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். காரில் இளங்குமரன் உள்பட 5 பேர் பயணம் செய்தனர்.
தெற்கு காட்டன் ரோடு பகுதியில் வந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்து உள்ளது. இதனை பார்த்த இளங்குமரன் காரை நிறுத்தி அதில் இருந்து கீழே இறங்கினார். இதைத்தொடர்ந்து காரில் இருந்த மற்ற 4 பேரும் உடனடியாக இறங்கினர். சிறிதுநேரத்தில் கார் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
கார் எரிந்து சேதம்
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், கார் எரிந்து சேதம் அடைந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர்.
காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நடுரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென கார் தீப்பிடித்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.