கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததால், திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
தீப்பற்றி எரிந்த கார்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராய பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்ற ஸ்டெட் (வயது 36). இசை ஆசிரியர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் தாய் வீட்டில் வசிக்கும் தனது கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக வந்தார். பின்னர் அவ்வப்போது கர்நாடக மாநிலம் சென்று தனது வேலையை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இவர், திண்டுக்கல் ஆர்.எம். காலனி 80 அடி ரோட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு தனது காரில் வந்தார். பின்னர் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு உடற்பயிற்சி கூடத்துக்குள் ரமேஷ் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அவருடைய காரின் முன்பக்க பகுதியில் இருந்து புகை கிளம்பியது. தொடர்ந்து என்ஜின் பகுதியில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
காரணம் என்ன?
இதற்கிடையே அங்கு வந்த ரமேஷ் தனது கார் தீப்பற்றி எரிவதை பார்த்து செய்வதறியாது தவித்தார். இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றிய தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் காரின் முன்பகுதி மற்றும் என்ஜின் முழுமையாக எரிந்து நாசமானது.
இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காரின் முகப்பு விளக்குகள் நீண்ட நேரமாக எரிந்துகொண்டே இருந்ததால், மின்கசிவு ஏற்பட்டு காரில் தீப்பற்றியது தெரியவந்தது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.