குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்


குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
x

பந்தலூர்-கூடலூர் இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர்-கூடலூர் இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர் மழை

பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பந்தலூரில் இருந்து தேவகிரி நீர்மட்டம், தேவாலா, நாடுகாணி வழியாக கூடலூருக்கு நெடுஞ்சாலை செல்கிறது.

ஊட்டி, கூடலூரில் இருந்து இந்த சாலை வழியாக பந்தலூர் மற்றும் கேரள மாநிலமான சுல்தான்பத்தேரி, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பந்தலூரில் இருந்து கோவை, திருப்பூர், சேலம் போன்ற இடங்களுக்கு அரசு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் கேரள அரசு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும்.

சீரமைக்க வேண்டும்

இதற்கிடையே பந்தலூர்-கூடலூர் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக குழிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. குழி இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்கின்றனர். எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சாலையில் குழி இருப்பதே தெரியாத அளவுக்கு தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளது. குழிகளில் சிக்கும் அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் பழுதடைந்து சாலையின் நடுவே நின்று விடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சில இடங்கள் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பெரிய குழிகளாக உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story