குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
கூடலூர்-கோழிக்கோடு இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர்-கோழிக்கோடு இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
கூடலூரில் இருந்து கோழிக்கோடு, மலப்புரத்துக்கு செல்லும் சாலை உள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் சரக்கு லாரிகள், தனியார் வாகனங்கள் மற்றும் ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சாலை வழியாக கேரளாவுக்கு இயக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் நாளுக்கு நாள் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் வெளிமாநில சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கூடலூர், பந்தலூர் தாலுகா மக்களும் சாலையின் நிலையை பார்த்து முகம் சுழித்து வருகின்றனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட துறையினர் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து வருகின்றனர்.
கழன்று ஓடிய சக்கரம்
ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதடைந்து வருகின்றன. சில சமயங்களில் அதன் சக்கரங்கள் கழன்று விழுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று மதியம் 12 மணிக்கு கூடலூர் நோக்கி வந்த சரக்கு வாகனத்தின் சக்கரம் ஒன்று பாதாள குழியில் இறங்கி ஏறிய போது, திடீரென பின்பக்க சக்கரம் கழன்று விழுந்தது. இதனால் வாகனம் சாலையில் நின்றிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, பல்லாங்குழிகளாக காணப்படும் சாலையை புதுப்பிக்காமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது. வாகனங்களும் பழுதடைந்து நின்று விடுகிறது. எனவே, சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.