காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்
காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் பாரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து அலுவலர்களுக்கும் இ.டெண்டர் பயிற்சி வழங்க வேண்டும்.
ஜனவரி 2023 முதல் மார்ச் 2023 வரை 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். காலாவதியான அனைத்து ஜீப்புகளையும் திரும்ப பெற்று அனைத்து அலுவலர்களுக்கும் புதிய ஜீப்புகள் வழங்குவதுடன் வாகனங்களை காப்பீடு செய்ய வேண்டும்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைப்பதை தவிர்த்து சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை அரசாணைகளாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.