டிராக்டர் கவிழ்ந்து சிறுவன் சாவு
நத்தம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
நத்தம் அருகே உள்ள பட்டணம்பட்டியை சேர்ந்தவர் அழகன். (வயது40). விவசாயி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் ஜெகன் (12) நேற்று முன்தினம் மாலையில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை இயக்கி ஓட்டிகொண்டிருந்தான். அவன் அருகில் 3-வது மகன் கர்ணன் (8) உட்கார்ந்து இருந்தான். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஜெகன் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ணன், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தான். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.