பள்ளி விடுதியில் தற்கொலை செய்த பிளஸ்-2 மாணவியின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவியின் உடல் அவரது சொந்த ஊரில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரியில் உள்ள சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி சரளா (வயது 17) என்கிற மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை பள்ளியின் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவியின் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க பள்ளியிலும், மாணவியின் சொந்த ஊரிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
பிரேத பரிசோதனை
இந்நிலையில் மாணவியின் உடல் நேற்று காலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதையொட்டி ஆஸ்பத்திரியின் வளாகத்தை போலீசார் தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்தனர்.
அப்போது மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியின் வெளியே திரண்டு இருந்தனர். அவர்கள் யாரையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
உடல் அடக்கம்
இதன் பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரான திருத்தணியை அடுத்த தெக்கனூருக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவி சரளாவின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவியின் உடலுக்கு உறவினர்கள், கிராம மக்கள், திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், மாணவியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் இறுதி சடங்கில் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யான் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தெக்கனூர் கிராமத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.