சவுதி அரேபியாவில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் சொந்த ஊரில் தகனம்


சவுதி அரேபியாவில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் சொந்த ஊரில் தகனம்
x

சவுதி அரேபியாவில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

அரியலூர்

தொழிலாளி உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழகுடிகாடு கிராமத்தில் வசித்து வருபவர் செந்தமிழ்ச்செல்வன்(வயது 58). இவர் கடந்த 2015-ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டிற்கு சென்று கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் அவர் பேசியபோது அவரது குடும்பத்தினரிடம் தனக்கு உடல்நலம் குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் சொந்த ஊருக்கு வந்து சிகிச்சை பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த மாதம் 9-ந் தேதி அன்று அவர் இறந்து விட்டதாக சவுதி அரேபியாவில் உள்ள அவர் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உடன் பணிபுரிபவர்களை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

சொந்த ஊரில் தகனம்

இதைத்தொடர்ந்து வெளிநாடு சென்று கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்த நிலையில் இறந்துவிட்ட செந்தமிழ்செல்வனின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் செந்தமிழ்செல்வனை இழந்த குடும்பத்தினர் மிகவும் வேதனை அடைந்தனர். அவரது மனைவி செந்தமிழ்செல்வி, மகன் வினோத், மகள் மஞ்சு ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம், செந்தமிழ்செல்வனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்யும்படி மனு கொடுத்தனர். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தமிழக அரசு மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மூலம் முயற்சி செய்து உடலை சொந்த ஊருக்கு மீட்டுக் கொண்டு வர உரிய உதவிகள் செய்தார். இதை அடுத்து 1 மாதத்திற்கு பிறகு நேற்று மாலை செந்தமிழ்செல்வனின் உடல் அவரது சொந்த ஊரான கீழக்குடிகாடு கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிய அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்து நேற்று இரவே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது


Next Story