அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை நடந்து கொண்டது மனித உரிமை மீறல்
அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை நடந்து கொண்டது மனித உரிமை மீறல் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
3 பேர் சந்திக்கலாம்
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிறை துறையின் நடைமுறைப்படி ஒரு நாளைக்கு 3 மனுதாரர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்கலாம். இதுதவிர குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் அவரை சந்திக்கலாம். முறைப்படி சிறை துறையின் அனுமதி பெற்ற பின்னர் தான் யாராக இருந்தாலும் அவரை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதுதான் சிறைத்துறை விதி.
மனித உரிமை மீறல்
செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை நடந்து கொண்டது மனித உரிமை மீறல். 17 மணி நேரத்திற்கு மேல் அவரை துன்புறுத்தி உள்ளனர். இது ஒரு ஜனநாயக படுகொலை, இதுதான் அவருக்கு நெஞ்சுவலி வந்ததற்கான காரணம்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதால் தான் சி.பி.ஐ. இனிமேல் தமிழக அரசின் அனுமதி பெற்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தில் வரும் சி.பி.ஐ அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளுக்கும் பொருந்தும்.
சட்டம் அனைவருக்கும் சமம்
செந்தில்பாலாஜியை கொடுமைப்படுத்தி தி.மு.க.வை அச்சுறுத்துவதற்காகத்தான் அமலாக்கத்துறை அவர் மீது இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தி.மு.க. எதற்கும் அஞ்சாது என்று பா.ஜ.க.விற்கு தெரியாது.
இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்வது, அவர் புத்திக்கு ஏற்றவாறு அவர் விமர்சனம் செய்வதை காட்டுகிறது. சட்டம் அனைவருக்கும் சமம் தான். நீதிமன்ற உத்தரவுப்படி டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் அண்ணாமலையும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.