பனங்கிழங்கு சீசன் தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சீசனுக்கு முன்னதாகவே பனங்கிழங்கு விற்பனை தொடங்கியது
ராமநாதபுரம் மாவட்டத்தில் சீசனுக்கு முன்னதாகவே பனங்கிழங்கு விற்பனை தொடங்கியது.
பனங்கிழங்கு
தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான். தமிழர்களின் உணவு பண்பாட்டில் பெரும்பங்கு வகித்தவை பனையும் பனை சார்ந்த பொருட்களும். அதில் பனம்பழம், பதநீர், பனங்கள், பனை சர்க்கரை, பனங்கற்கண்டு, பனை வெல்லம் என பட்டியலிட்டு கொண்டே சென்றால், பனங்கிழங்கும் முக்கிய பங்கு வகிக்கும். இது மருத்துவ குணமும் கொண்டது. இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் விரும்பி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனங்களுடன் பனங்கிழங்கும் வழங்குவது மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சில நேரங்களில் மார்ச் மாதம் வரை பனங்கிழங்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பனங்கிழங்கு சீசன் தாமதமாக தொடங்கி உள்ளது. தற்போதுதான் பனங்கிழங்கு வரத்தொடங்கி உள்ளது.
கட்டுகளாக கட்டி விற்பனை
ராமநாதபுரம் நகரில் பஸ்நிலையம் பகுதி, அரண்மனை பகுதி, சாலைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்குகளை ஏராளமான பெண்கள் கட்டுகளாக கட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். 20 கிழங்குகள் உள்ள கட்டு ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பனங்கிழங்கு விற்பனை செய்யும் பெண் ஒருவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு பனங்கிழங்கு விளைச்சல் குறைவாகவே உள்ளது. இதனால் தாமதமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விலை அதிகமாகி விட்டது. இருப்பினும் பண்டிகை காலம் என்பதாலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்பதாலும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இன்னும் ஒரிரு வாரங்களில் இதன் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார்.