பால்கனி இடிந்து விழுந்தது
கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பால்கனி இடிந்து விழுந்தது. இந்த சம்வத்தில் ஆசிரியர் குடும்பத்தினர் உயிர் தப்பினர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கூடலூர்
கூடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பால்கனி இடிந்து விழுந்தது. இந்த சம்வத்தில் ஆசிரியர் குடும்பத்தினர் உயிர் தப்பினர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
வீட்டு வசதி வாரியம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் மார்தோமா நகரில் தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இங்கு 144 வீடுகள் இருந்தது. பெரும்பாலான வீடுகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. இதனால் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு உடைந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை சம்பந்தப்பட்ட துறையினர் இடித்து அகற்றினர்.
தொடர்ந்து அதே வளாகத்தில் 30 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்பட வில்லை. இதனால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கட்டிடங்களின் மேற்கூரைகளில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து வருகின்றன. இதனால் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
பால்கனி இடிந்தது
இந்தநிலையில் கூடலூரில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இரவு 9 மணியளவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் பால்விக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் நுழைவுவாயில் முன்பு இருந்த பால்கனி திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து கீழே விழுந்தது. இந்த சமயத்தில் வீட்டுக்குள் இருந்த பால் விக்டர் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் வெளியே வர முயன்றனர். ஆனால், பால்கனி முழுமையாக இடிந்து விட்டதால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் பயத்தில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு சக குடியிருப்பு வாசிகள் ஓடிவந்தனர். பின்னர் கூடலூர் தீயணைப்பு துறையினக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மீட்பு
இதன்பேரில் நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர் வீட்டுக்குள் சிக்கி தவித்த பால் விக்டர் குடும்பத்தினரை மீட்டனர். பின்னர் பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்த பொருட்கள் வெளியே கொண்டு வரப்பட்டது. பின்னர் அவர்கள் மற்றொரு குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனிடையே குடியிருப்புகள் அடிக்கடி உடைந்து விழுவதால், அங்கு வசிக்கும் அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே, புதிதாக கட்டி திறக்கப்படாமல் உள்ள வீடுகளை அரசு ஊழியர்கள் குடும்பத்தினருக்கு விரைவாக ஒதுக்க வேண்டுமென அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.