"நான் பேசியதாக வெளியான ஆடியோ.." - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்த விளக்கம்..!
ஆடியோ தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 நொடிகள் கொண்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் எந்த பதிலும் அளிக்காத நிலையில், விளக்கம் அளிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் கோரியிருந்தனர்.
இந்நிலையில், சர்ச்சையை ஏற்படுத்திய அந்த 26 நொடி ஆடியோ புனையப்பட்டது என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், அந்த ஆடியோவை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி, தனது ஆடியோ புனையப்பட்டுள்ளது என்பதை வட்டமிட்டு காட்டியுள்ளார். அதில், பல்வேறு ஆடியோக்களை கட் செய்து ஒட்டி வெளியிட்டிருப்பது நிரூபனமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் 'தி கிரேட் எஸ்கேப்' என்ற படத்தின் சிறிய வீடியோ வெளியிட்டிருப்பதாகவும், அதன் மூலம், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எடிட் செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த ஆடியோ தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.