தற்கொலைக்கு முன் மளிகை கடைக்காரர் பேசிய ஆடியோ வெளியானது


தற்கொலைக்கு முன் மளிகை கடைக்காரர் பேசிய ஆடியோ வெளியானது
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே தற்கொலைக்கு முன் மளிகை கடைக்காரர் பேசிய ஆடியோ வெளியானது. ரூ.23 லட்சம், 13 பவுன் நகை வாங்கிவிட்டு மிரட்டிய பெண் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

மளிகை கடைக்காரர்

கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(வயது42). இவருக்கு ரம்யா என்ற மனைவியும், இசைவாணன்(12) என்ற மகனும், இனியவள் (6) என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் சின்னசேலம் அருகே நயினார்பாளையம் கிராமத்தில் துரைசாமி என்பவரது வீட்டில் குடும்பத்துடன் வசித்து அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மாலை தான் வசித்து வந்த வாடகை வீட்டில் ரமேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

உருக்கமான ஆடியோ

இதற்கிடையே ரமேஷ் தான் தற்கொலை செய்துவற்கு முன்னதாக அவரது மனைவிக்கு அனுப்பிய உருக்கமான ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில் ரூ.23 லட்சம் மற்றும் 13 பவுன் நகைகளை சிறுபாக்கத்தை சேர்ந்த பெண்ணிடம் கொடுத்துள்ளேன். யார், யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறேன் என்ற விவரம் நாம் எழுதி வைக்கும் கணக்கு பையில் உள்ளது. அதை பார்த்துக்கொள். பெண்ணிடம் கொடுத்த பணத்தை கேட்டால், அவர் நமது பிள்ளைகளை குறிவைத்து மிரட்டுகிறாள். நான் தற்கொலை செய்து கொள்வதற்கு அந்த பெண் மற்றும் 2 பேர் தான் காரணம் என ரமேஷ் கூறியிருக்கிறார்.

நகை, பணம் வாங்கிய பெண் யார்?

இதனால் ரமேஷ், சிறுபாக்கம் பெண்ணுக்கு நகை, பணத்தை கொடுத்து இருக்கிறார். பின்னர் அதை திருப்பி கேட்டபோது அந்த பெண் அவரை மிரட்டி உள்ளார். மேலும் அவருக்கு கடன் கொடுத்தவர்களும் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து இருக்கலாம். இந்த 2 காரணங்களால் மனமுடைந்த ரமேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து ரமேசிடம் இருந்து பணம், நகைகளை வாங்கிய அந்த பெண் யார்? அவர் எங்கே இருக்கிறார். கடன் கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்த நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story