கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பப்பதிவு 2 கட்டமாக நடைபெறும் -தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் தகவல்


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பப்பதிவு 2 கட்டமாக நடைபெறும் -தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
x

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பப்பதிவு 2 கட்டமாக நடைபெறும் என்று தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறும். முதல்கட்ட முகாம் வருகிற 24-ந் தேதி முதல் 4-ந்தேதி வரையும், 2-ம் கட்டமாக வருகிற 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெறும்.

ரேஷன் கடையில் பணிபுரியும் பணியாளர்கள், முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்கள். முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். பொதுமக்கள் விண்ணப்பங்களை பெற ரேஷன் கடைக்கு வரவேண்டாம். உங்கள் ரேஷன் அட்டை இருக்கும் ரேஷன் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

குடும்பத் தலைவி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக முகாம் நடைபெறும் இடத்துக்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வரவேண்டும். சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் எடுத்து வர வேண்டும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்ற குடும்பங்களில் 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story