"அடமானத்தில் இருந்து அ.தி.மு.க. மீண்டு தமிழ் மானம் காக்க வேண்டும்"- கி.வீரமணி


அடமானத்தில் இருந்து அ.தி.மு.க. மீண்டு தமிழ் மானம் காக்க வேண்டும்-  கி.வீரமணி
x

அதிமுக அம்மாவின் கொள்கையையே மறந்து விட்டனர். மிகப்பெரிய இயக்கமான அதிமுகவிற்கு இது போன்ற நிலை ஏற்பட்டு இருப்பது வேதனையாக உள்ளது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி அளித்துள்ளார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்குழு மற்றும் தீர்மானம் விளக்க கூட்டம் நேற்று நடந்தது. செயல் அவைத்தலைவர் அறிவுக்கரசு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி பங்கேற்று பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அக்னிபத் திட்டத்தில் இணைந்தால் துணி துவைக்கலாம். முடி திருத்த போகலாம் என பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் கூறுவது இளைஞர்களின் கோபத்தை தூண்டுகிறது. வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது போல் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் எந்த அரசியல் பின்புலமின்றி போராடி வருகின்றனர். பா.ஜ.க. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய விடாமல் பிரித்தாளுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியை வைத்து பொம்மலாட்டம் நடத்துகிறது. யார் வர வேண்டும் என்பதையும், யார் வரக்கூடாது என்பதையும் பா.ஜ.க. திட்டமிட்டு காய் நகர்த்துகிறது.

2024-ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அ.தி.மு.க.வினர், திராவிடர் கழகம் தாய் கழகம் என்பதை மறந்துவிட்டார்கள். அ.தி.மு.க.வின் தாயாக இருந்தவரையும் மறந்துவிட்டார்கள். லேடியா? மோடியா? என கேட்ட ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக திசை மாறி செல்கின்றனர். டெல்லி யாரை கூறுகிறதோ, அவர்கள் அ.தி.மு.க.வின் தலைமையாக வருவார்கள் என தெரிகிறது. அ.தி.மு.க.வின் பொதுக்குழுவால் புதுக்குழுதான் உருவாகிறது. அடமானத்தில் இருந்து அ.தி.மு.க. மீண்டு தமிழ் மானம் காக்க வேண்டும், மிகப்பெரிய இயக்கமான அ.தி.மு.க.விற்கு இது போன்ற நிலை ஏற்பட்டு இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story