கிருஷ்ணகிரி நடிகர் மாயம்


கிருஷ்ணகிரி நடிகர் மாயம்
x

கிருஷ்ணகிரியை சேர்ந்த நடிகர் நடித்து வெளியான படம் ஓடாததால் வேதனையில் அவர் மாயமானார். முன்னதாக அவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

நடிகர் மாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சென்னசந்திரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் பூ போன்ற காதல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அவரே கதை, திரைக்கதை ஆகியவற்றையும் எழுதி உள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியானது.

ஆனால் இந்த படத்திற்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. படம் ஓடாததால் வேதனை அடைந்த சுரேஷ் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

வீடியோ வைரலானது

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு விடுதியில் அவர் தங்கி இருப்பதாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் விடுதியில் இருந்து வெளியே சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக அவரது தாய் லட்சுமி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று முதல் வைரலாகி வருகிறது.

போலீசார் விசாரணை

அதில் அவர், எனக்கு இந்த படத்தால் கடன் பிரச்சினை உள்ளது. படம் பார்க்க குறைந்த அளவிலேயே மக்கள் வந்தனர். நான் அதிகம் பேரிடம் கடன் வாங்கி உள்ளேன். நான் உயிரோடு இருக்க மாட்டேன். தற்கொலை செய்ய போகிறேன். யாரும் படம் எடுக்காதீர்கள். நிறைய பணம் இருந்தால் மட்டும் படம் எடுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை அவர் தான் நடத்தி வரும் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதை அவரது நண்பர்கள் பார்த்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். படம் ஓடாததால் நடிகர் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story