தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு,
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய வாலிபர். இவருக்கும் சி.என்.பாளையத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணிற்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பு தனக்கு பழக்கமான நடுவீரப்பட்டை சேர்ந்த சஞ்சீவி(23) என்பவருடன் அந்த இளம்பெண் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கணவர், தனது மனைவியை மாமனார் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி அந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மேல்விசாரணை நடத்தினார். விசாரணையில், சஞ்சீவி அந்த இளம்பெண்ணுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததால் அந்த இளம்பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து, இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி சஞ்சீவியை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சஞ்சீவியை ஓராண்டுக்கு பிறகு நடுவீரப்பட்டு போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.