ஈரோட்டில் 8 நாட்களாக நடந்த தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்


ஈரோட்டில் 8 நாட்களாக நடந்த தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
x

ஈரோட்டில் 8 நாட்களாக நடந்து வந்த தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஈரோடு

ஈரோட்டில் 8 நாட்களாக நடந்து வந்த தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

வேலைநிறுத்தம்

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 23-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டுமே குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டதால் பல்வேறு இடங்களில் குப்பைகள் சேகரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் போராட்டத்தில் ஈடுபடாத தூய்மை பணியாளர்கள் ஒரு பகுதியில் சுழற்சி முறையில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 பேர் வேலை பார்த்த இடத்தில் ஒருவர் அல்லது 2 பேர் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் குப்பை சேகரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கியது.

பேச்சுவார்த்தை உடன்பாடு

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப். தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

மாலை 6 மணி அளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 9 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 8 நாட்களாக நடந்து வந்த வேலைநிறுத்த போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து நேற்று காலையில் இருந்து தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். அவர்கள் வீடு, வீடாக குப்பைகளை சேகரிக்கும் பணி, தூய்மை செய்யும் பணியை வழக்கம்போல் தொடங்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

கோரிக்கைகள் ஏற்பு

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சியில் தற்போது பணியாற்றி வரும் அனைத்து தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். 60 வயது நிறைவடையும் வரை அவர்களுக்கு வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் தற்போது பெற்று வரும் நாள் ஒன்றுக்கு ரூ.707 ஊதியத்தை குறைக்க கூடாது. அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தோம். இந்த கோரிக்கைகளை ஏற்று மாநகராட்சி அதிகாரிகள் செய்து கொடுப்பதாக உறுதி அளித்தனர். வேலை நிறுத்தம் நடத்தப்பட்ட போது தேங்கிய குப்பைகளை மீண்டும் தூய்மை பணியாளர்களே அள்ள வேண்டி இருப்பதால், போராட்டம் நடத்திய நாட்களுக்கும் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதற்கும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்றனர்.


Next Story