காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு புறப்பட்ட 4-வது குழு
தமிழகத்திற்கும், உத்தரபிரதேச மாநிலம் காசிக்கும் இடையே உள்ள ஆன்மிக உறவை வலுப்படுத்தும் வகையில், ‘காசி தமிழ் சங்கமம்' எனும் ஆன்மிக நிகழ்வை மத்திய கல்வித்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது.
சென்னை,
தமிழகத்திற்கும், உத்தரபிரதேச மாநிலம் காசிக்கும் இடையே உள்ள ஆன்மிக உறவை வலுப்படுத்தும் வகையில், 'காசி தமிழ் சங்கமம்' எனும் ஆன்மிக நிகழ்வை மத்திய கல்வித்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. தற்போது, 'காசி தமிழ் சங்கமம் 2.0' நிகழ்வு வாரணாசியில் வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில், பங்கேற்க தமிழகத்தில் இருந்து 7 குழுக்கள் வாரணாசி செல்கின்றன.
முதல் குழு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 15-ந்தேதி புறப்பட்டு சென்றது. 2-வது குழு கன்னியாகுமரியில் இருந்து கடந்த 16-ந்தேதியும், 3-வது குழு கோவையில் இருந்து கடந்த 19-ந்தேதியும் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், 'காசி தமிழ் சங்கமம் 2.0' ஆன்மிக பயணங்களுக்கான 4-வது குழு, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது.
இந்த நிலையில், 4-வது குழுவில் இடம்பெற்றுள்ள சென்னையை சேர்ந்தவர்கள், கன்னியாகுமரி-வாரணாசி சிறப்பு ரெயில் பயணம் மேற்கொள்ள பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று வருகை தந்தனர். அவர்களை, தமிழக பா.ஜனதா ஆன்மிக பிரிவு மாநில தலைவர் நாச்சியப்பன், காசிக்கு வழியனுப்பி வைத்தார்.
4-வது குழுவில், 85 பெண்கள் உள்பட 216 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த குழுவினர், நாளை அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசி செல்கின்றனர். அதன்பிறகு, காசி ஆன்மிக நிகழ்வில் பங்கேற்கின்றனர்.