அதிகாரியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: 3-வது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
3-வது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தோல்வியில் முடிந்தது.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 27-ந்தேதி முதல் இதே கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர். வழக்கம்போல, மாணவர்களின் கல்வியை பாதிக்காத வகையில் அரையாண்டு விடுமுறை நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3-வது நாளாக நேற்றும் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.
முதல் நாளில் தொடக்கக்கல்வி இயக்குனருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன், இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். செயலாளர், அமைச்சரிடம் பேசிவிட்டு தெரிவிப்பதாக கூறியதால், அந்த பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். போராட்டகளத்தில், இதுவரை 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கின்றனர்.