திருட்டில் ஈடுபட்டவரிடம் பணத்தை அபேஸ் செய்த 2 பேரும் சிக்கினர்
திருட்டில் ஈடுபட்டவரிடம் பணத்தை அபேஸ் செய்த 2 பேரும் சிக்கினர்.
வியாபாரியிடம் திருட்டு
திருச்சி தீரன்நகரை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 35). இவர் தள்ளுவண்டியில் ரெடிமேட் துணி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் சுரேந்தரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை திருடி சென்றனர். இதையறிந்த சுரேந்தர் கூச்சலிட்டார். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்களை கண்டோன்மெண்ட் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் நத்தமாடிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 22), மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்த அருண் (22), நிவாஷ் (21) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். இதற்கிடையே சக்திவேலை விரட்டி பிடித்தபோது, அவர் செல்போன் விற்று வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்றதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிந்து, இது தொடர்பாக மிளகுப்பாறையை சேர்ந்த பாலைவாசன் (26), நாகராஜ் (41) ஆகியோரை கைது செய்தனர்.
கத்தியை காட்டி மிரட்டல்
*திருவானைக்காவல் கன்னிமார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் ( 35). இவர் டிரங்க் ரோட்டில் நேற்று முன்தினம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி செந்தில்குமாரிடம் பணம் கேட்டார். இது குறித்து செந்தில்குமார் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டியதாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஹரிஹரனை (27) கைது செய்தனர்.
*திருச்சி தென்னூர் ஹைரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் கண்டோன்மெண்ட் ரேடியோ பீடி காலனியை சேர்ந்த பாக்கியராஜ் (34) மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் டாஸ்மாக் கடை முன்பு தனது நண்பரிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தென்னூர் சின்னசாமிநகரை சேர்ந்த ராமச்சந்திரன் (33), பாக்கியராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.